சென்னை: சென்னை விமான நிலையத்தில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. உள்நாட்டு விமான முனையம் சர்வதேச முனையம் என்று மாறி மாறி கண்ணாடிகள் உடைந்து விழுவது வாடிக்கையாக இருந்து வந்தது. சுவர்களின் பதித்துள்ள கண்ணாடிகள், கண்ணாடிக் கதவுகள், மேற்கூரை பால் சீலிங்குகள், சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் என்று 90 முறைகளையும் தாண்டி இந்த விபத்துக்கள் நடந்து வந்தன.
ஆனால், இந்த விபத்துகளில் பெரிய அளவில் காயங்கள், உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல், ஒரு சிலர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்துகளைத் தடுப்பது, சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக விளங்கியது. அதன் பின்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கண்ணாடிகள் உடைந்து விழுவது இல்லாமல் இருந்தது.
இதனால் சென்னை விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர். ஆனால், கடந்த ஆண்டு ஒரு முறை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரிய கண்ணாடிக் கதவு உடைந்து மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்பு, இந்த ஓராண்டாக கண்ணாடி எதுவும் உடைந்து விழாமல் இருந்தது.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 30) மாலையில், சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் ஒன்று வருகைப் பகுதியில் 4வது கேட்டில் இருக்கும் சுமார் 7 அடி உயரம் கொண்ட கண்ணாடிக் கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. ஆனால், கண்ணாடி உறுதியானதாக இருந்ததால் சிதறி கீழே விழாமல், நொறுங்கி கதவிலேயே இருந்தது.
மேலும், அந்த 4வது கேட்டில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்தாமல் மூடியே இருக்கும் என்பதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த கேட், வெளி மாநில ஆளுநர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது மட்டுமே திறக்கப்படும். ஆனால், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அது போன்ற சிறப்பு அனுமதி யாருக்கும் கிடையாது. எனவே, அந்த நான்காவது கேட் மூடியே இருந்தது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனையடுத்து, இந்த தகவல் கேள்விப்பட்டு விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, உடைந்த கண்ணாடிக் கதவை ஆய்வு செய்தனர். மேலும், உடைந்த அந்த கண்ணாடிக் கதவை அவசர அவசரமாக இரவோடு இரவாக மாற்றி, புதிய கண்ணாடிக் கதவை அமைத்துள்ளனர்.
மேலும், முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் விஐபி கேட்டான 4வது கேட்டில் உள்ள கண்ணாடிக் கதவு உடைந்ததால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில், கேட் எண் 2 அல்லது 1-இல், இதேபோல் கண்ணாடிக் கதவு உடைந்து இருந்தால், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் போன்றோர் பெரும் பாதிப்பு அடைந்திருப்பர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த கண்ணாடிக் கதவு எப்படி உடைந்தது என்பது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடுமையான கோடை வெப்பத்தில் கண்ணாடி மெல்ட் ஆகி உடைந்திருக்கலாம் அல்லது தற்போது சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது ஃபேஸ் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதால், அதில் கம்ப்ரஸர்கள் மற்றும் இயந்திரங்கள் இயக்கப்படும் போது அதிர்வுகள் பெரிய அளவில் உருவாகி அதனால் உடைந்து இருக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஆசையாக அழைத்து அல்வா கொடுக்க முயன்ற பெண்.. நெல்லையில் தொழிலதிபர் கடத்தலின் பின்னணி என்ன? - Woman Kidnapped Businessman