ஈரோடு அரசு பள்ளி சுவரில் காவி உடையில் இருந்த திருவள்ளுவர் ஓவியத்தை அதிகாரிகள் அழித்தனர் ஈரோடு: ஈரோடு அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவரில் வரையப்பட்ட காவி உடையிலான திருவள்ளுவர் உருவப்படத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிளுடன் பாரதிய ஜனதா கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள பேரோடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 7 மாதத்திற்கு முன்பு, பள்ளி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம், பள்ளி சுற்றுச்சுவரில், பல்வேறு சித்திரங்களை வரைந்துள்ளனர்.
இந்நிலையில், அதில் இடம் பெற்றுள்ள திருவள்ளுவரின் உருவப்படம், காவிய உடையில் இருப்பதைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதனை மாற்றி அமைக்க வேண்டும் எனக்கூறி பள்ளி கல்வித்துறை அலுவலகம் மற்றும் சித்தோடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:சேலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது!
அந்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இன்று (ஜன.30) போலீஸ் பாதுகாப்புடன் வந்த அதிகாரிகள், திருவள்ளுவரின் உருவப்படத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர், காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் உருவப்படத்தை அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எனினும் பாஜக-வினரின் எதிர்ப்பையும் மீறி, காவி உடையில் இருந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை அழித்த அதிகாரிகள், அதற்கு மாற்றாக வெள்ளை உடையில் இருப்பது போன்ற திருவள்ளுவரின் உருவப்படம் வரையப்படும் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:பாஸ்ட் புட் கடைகளே டார்கட்.. ஊழியர்களின் செல்போனை நூதன முறையில் திருடிய பலே கில்லாடி.. சிக்கியது எப்படி?