தஞ்சாவூர்:மாமன்னன் ராஜராஜ சோழன் கி.பி 985 ல் சோழப் பெருமன்னனாக அரியணையில் அமர்ந்து அழகிலும், அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கி 'இராசகேசரி' என்ற பட்டம் பூண்டு கி.பி 1014 வரை ஆட்சி புரிந்து தமிழகத்தின் பெருமையை உலகறிய செய்தவர். மேலும் உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார்.
அதேபோல, ராஜராஜ சோழன் மன்னராக முடிசூட்டியதும் ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தில்தான். பிறந்த நாளையும், முடிசூடிய நாளையும் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் ராஜராஜ சோழனின் 1039 ஆம் ஆண்டு 'சதய விழா' கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.
ஓதுவா மூர்த்தி பேட்டி (Credit - ETV Bharat Tamil Nadu) முதலில் பத்மநாபன் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கி களிமேடு, அப்பர் பேரவை ஓதுவா மூர்த்திகளின் தேவார, திருமுறை விண்ணப்பத்துடன் விழா தொடங்கியது. இவ்விழாவில் தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, சதய விழா குழு தலைவர் செல்வம் உள்ளிட்ட பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:கந்த சஷ்டி விழாவின் போது கூடுதல் கட்டணம் வசூல்? பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவித்தல், திருமுறை அரங்கம், மேடை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், நாத சங்கமம், சிறப்பு பரதநாட்டியம், கவியரங்கம், தேவார இன்னிசை, நாத சங்கமம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஓதுவார் ஜனகரஞ்சன் கூறுகையில்,"தில்லையில் பூட்டி கிடந்த தேவார திருமுறைகளை ராஜராஜ சோழன் தான் கண்டெடுத்தார். அதனால்தான் சதய நட்சத்திரத்தன்று ஓதுவா மூர்த்திகள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் படியாக அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அனைவரும் தேவாரத்தை பாடி பெருமை சேர்த்து வருகிறோம்.
பெரிய கோயில் கட்டியதால் உலகத்தில் சிறந்து விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து 1039 ம் ஆண்டு விழாவில் அப்பர் அவை மூலமாக பாடி வருகிறோம். தேவார திருமுறைகளை அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக வைக்க தமிழக அரசு நடவடிகை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.