வேலூர்:வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வேலூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அதிகாரி பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில், வேலூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். இதில் அரசியல் கட்சியினர் உயிருடன் உள்ளவர்கள், ஒரு பகுதியில் ஒரே பெயரில், ஒரே பாலினம் ஆகியவற்றில் இருந்தால் அவர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சுட்டிக்காட்டி, இந்த பெயர் நீக்கம் குறித்து விளக்கம் கேட்டு வாக்காளர்களுக்கு அனுப்பப்படும் நோட்டீஸூம் ஆங்கிலத்தில் உள்ளதால், அது என்னவென்று கிராமப்புற மக்களுக்கும் புரியவில்லை எனவும் எடுத்துக் கூறினார்கள்.
வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு என ஐந்து தொகுதிகளில் மொத்தம் 13 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 10 சதவிகிதம் தேர்தல் ஆணையத்தால், அதாவது சுமார் 1.23 லட்சம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஒரே ஊரில் ஒரே பெயரில் ஐந்து பேர் இருந்தாலும், அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யப்படுவதால் கிராம மக்கள் வாக்காளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறினார்கள்.