தேனி: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக ஆதரவு சுயேட்சை வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம் கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களிடம் பேசும் போது, "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால் மிகப்பெரும் பொருளாதாரச் செலவு ஏற்படும்.
அந்த செலவுகளுக்குப் பின்னாலும், பல்வேறு சோதனைகளை தொண்டர்கள் சந்திக்க நேரிடும். எனவே, தொண்டர்களை சோதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதற்காகத்தான், இந்த மாபெரும் பொறுப்பை நானே ஏற்று மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறேன்.
கடந்த 1999இல் பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரன் வெற்றி பெற்று எம்.பியானார். நலத்திட்டங்கள் மூலம் தாராள மனப்பான்மையை கற்றுக் கொடுத்தவர். அதற்குப் பின் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினாலும், அவரது எண்ணம், செயல், இதயம் தேனியைச் சுற்றியே இருந்தது என்பதை நான் நன்றாகவே அறிவேன். அதன்படி, தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட நாங்கள் விருப்பம் தெரிவித்தோம்.
அதன்படி தேனி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவுடன் போட்டியிடும் டிடிவியை வெற்றி பெறச் செய்யப் பாடுபட வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட வேண்டும் என்று கூட்டணி தலைமை, தொண்டர்கள் விரும்பினர்.