சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மக்களின் உரிமைகள் மற்றும் உணர்வுகளை சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் வீரியமாக பிரதிபலிக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனையின் அடிப்படையில், தலைமை நிர்வாகக் குழுவால் முடிவெடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், கடந்த மார்ச் 16ஆம் தேதியன்று, சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசிது, மஜக தலைமை நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.
இதற்கிடையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தமிமுன் அன்சாரி, தனது ஆதரவாளர்களுடன் இன்று அறிவாலயம் சென்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக செய்தி வருகிறது. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே அவர் செய்த செயலாகும்.