நீலகிரி:நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள், மூன்றடுக்கு பாதுகாப்புடன் 173 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் மு.அருணா இன்று (ஏப்.28) தெரிவித்துள்ளார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்த தேர்தலில் பயன்படுத்திய வாக்கு இயந்திரங்கள், உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இவை துணை ராணுவப் படை, சிறப்பு ஆயுதப்படையினர், துப்பாக்கி ஏந்திய உள்ளூர் காவலர்கள் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
173 கண்காணிப்பு கேமரா மூலம் வாக்கு இயந்திரங்கள் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை கேமராக்கள் செயலிழந்தது. தொழில்நுட்ப பிரச்னை உடனடியாக சரி செய்யப்பட்டு, தற்போது கேமராக்கள் முறையாக இயங்கி வருகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான மு.அருணா, உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு பாலிடெக்னிக் வளகத்திற்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைகளில் வெப்பம் காரணமாக நேற்று மாலை 6.17 முதல் 6.43 வரை 173 கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தது. 20 நிமிடத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் அதனை சரி செய்து, தற்போது கேமரா உள்ள பகுதியில் ஏர்கூலர்கள் அமைக்கப்பட்டு, சீராக இயங்கி வருகிறது.