சென்னை:சென்னையில் கடந்த மே மாதம் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதாக ஆறு பேரை உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் இந்த வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 12 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்திருந்த இந்த வழக்கினை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது. பின்னர் இரண்டாவதாக ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.