தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா ? - சென்னை, ராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! - சென்னை என்ஐஏ சோதனை

NIA RAID: சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

NIA RAID
NIA RAID

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 11:13 AM IST

Updated : Mar 5, 2024, 3:01 PM IST

சென்னை:சென்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வந்தனர். கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி பெங்களூரு, 'ராமேஸ்வரம் கஃபே' என்ற உணவகத்தில் வெடிகுண்டு வெடித்த வழக்கில் சோதனைகள் நடத்தப்படுவதாக முதலில் தகவல் வெளியானது.

ஆனால், தடை செய்யப்பட்ட லக்ஷர் இ தொய்பா என்ற இயக்கத்திற்கு சிறையில் இருக்கும் கைதிகளை மூளை சலவை செய்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில் ஒரு இடத்திலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு இடத்திலும் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை முத்தியால்பேட்டை பிடாரியார் கோயில் தெருவில் உள்ள நபர் ஒருவரின் குடியிருப்பில் ஐந்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது தொடர்பாக சோதனை நடத்தி ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்கனவே குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி நசீர் என்பவர் சிறைக்கு வரும் கைதிகளை மூளைச் சலவை செய்து பயங்கரவாத இயக்கத்தில் இணைத்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே சென்று ஐந்து நபர்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டபோது அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் பலர் தலைமுறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்கள் குறித்தும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ஹவாலா பணம் சென்னையில் இருந்து வங்கி கணக்கு மூலமாக சிறையில் உள்ள நசீர் பயங்கரவாதிக்கு சென்று இருப்பதை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் தான் சென்னை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கும் தடைசெய்யப்பட்ட அமைப்பினருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு பிறகு தான் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரொக்கம் உள்ளிட்ட விவரங்கள் வெளிவரும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க:தாளவாடியில் நாட்டு வெடிகுண்டை கடித்த மாடுகளின் வாய் வெடித்து சிதறல்.. 2 பேர் கைது - நடந்தது என்ன?

Last Updated : Mar 5, 2024, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details