சென்னை: சென்னை- பெங்களூர் இடையே, ரூ.18 ஆயிரம் கோடி செலவில் விரைவுச்சாலை அமைக்கும் பணிகளை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டம் முழுமை பெற்று சாலை பயன்பாட்டுக்கு வந்த பின், பெங்களூர் - சென்னை இடையிலான பயண நேரம் பெருமளவு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை - பெங்களூர் இடையே பயணம் செய்ய தற்போது 7 முதல் 8 மணி வரை நேரமாகும் நிலையில், விரைவுச்சாலைத் திட்டம் முடிவுக்கு வரும் பட்சத்தில், பயண நேரம் 4 மணி நேரமாக குறையும் என்றும், இதனால் மக்கள் இன்னும் வேகமாகவும், எளிதாகவும் பயணம் செய்ய முடியும் எனவும் கூறப்படுகிறது.
மொத்தம் 258 கி.மீட்டர் தூரத்திற்கு நீண்ட சாலை அமைக்கப்பட உள்ளது. தென் இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாவட்டங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலையாக உயர் தரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய பசுமை வழிச் சாலைகளில் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
அதன் ஒரு கட்டமாக, 23.2 கிமீ நீளமுள்ள மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் இடையேயான மேம்பாலப் பணி, இந்த நிதியாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்றும், இந்தப் பகுதியைக் கடக்க குறைந்தபட்சம் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரையாகும் நிலையில், பாலம் கட்டப்பட்டால், 10 - 15 நிமிடத்தில் இந்தப் பகுதியைக் கடக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை - பெங்களூர் இடையே அமைக்கப்படும் விரைவுச் சாலை (Express Way) தொடர்பான முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதில், "கர்நாடகாவில் 71 கி.மீ பிரிவு பணிகள் நிறைவடைந்து உள்ளதையடுத்து, 87சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் 85 கி.மீ பிரிவு பணிகள் நிறைவடைந்து உள்ளதையடுத்து, 40 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 106 கி.மீ பிரிவு பணிகள் நிறைவடைந்து உள்ளதையடுத்து, 55 சதவிகிதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 258 கி.மீ கொண்ட எக்ஸ்பிரஸ் வே (Chennai to Bangalore Expressway) 6 வழி விரைவுச்சாலை முழுவதையும் முடிக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மாநிலங்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக!