திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக பதவியேற்றுள்ள நெல்லை டவுணை சேர்ந்த ராமகிருஷ்ணன் பதவி ஏற்பு விழா முடிந்த கையோடு அவருக்கு கொடுக்கப்பட்ட அரசு சொகுசு காரை பயன்படுத்தாமல் தனக்கு இந்தனை ஆண்டுகளாக துணையாக இருந்த சைக்கிளில் அவருக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறுகலான தெருவில் சாதாரண வீடு, மக்களின் குறைகளை கேட்டறிய ஒரு பழைய ஹெர்குலஸ் சைக்கிள் என எளிமையான பின்னணியை கொண்ட ராமகிருஷ்ணன் தான் இன்று (சனிக்கிழமை) நெல்லையின் ஏழாவது மேயராக பதவியேற்றுள்ளார்.
சிறுவயது முதலே திமுகவின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர், 1980ம் ஆண்டு முதல் கட்சிக்காக உழைத்து வருகிறார். பழமையான வீடு குடும்பம் என எந்த ஆடம்பரமும் இல்லாமல் வாழ்ந்து வரும் கிட்டுவிற்கு சைக்கிள் தான் உலகம். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இருசக்கரம் வாகனம் கூட பயன்படுத்தாமல் தனது சைக்கிளில் சுற்றி திரியும் இவர், மாமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னரும் மக்களின் குறைகளை சைக்கிளில் சென்றே கேட்டு வந்துள்ளார்.
இதற்கிடையில், நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சியான திமுக சார்பில் கிட்டு(எ) ராமகிருஷ்ணன் போட்டியிட்ட நிலையில், 30 வாக்குகள் பெற்று ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.