சென்னை:எம்டி, எம்எஸ் ஆகிய முதுநிலை படிப்பிற்கான நீட் தேர்வு வரும் ஆக 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் டெலிகிராம், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் NEET-PG LEAKED MATERIAL என்ற பெயரில் முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக ஸ்கிரீன் ஷாட்கள் பகிரப்பட்டு வைரலாகி வந்தன. மேலும், வினாத்தாள்கள் ரூ.70,000 வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதற்கு தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறுப்பு தெரிவித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சமூக வலைத்தளங்களின் மூலம் சில தவறான கருத்துக்கள் பரப்புவது எங்களது கவனத்திற்கு வந்துள்ளது. சிலர் குறிப்பிட்ட தொகையை செலுத்தி வரவிருக்கும் நீட் தேர்வின் வினாத்தாள்களை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மோசடிக்கு எதிராக நாங்கள் போலீசில் புகார் அளித்துள்ளோம். மேலும், முதுநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் NEET-PG LEAKED MATERIAL என்ற சேனல் போலியானது. இதனை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் மறுக்கிறது.
மேலும், வரவிருக்கும் நீட் தேர்வுக்கான கேள்வி வினாத்தாள் இன்னும் தயாரிக்கப்படவில்லை. சமூக வலைத் தளங்களில் பரவும் இந்த வினாத்தாள்கள் போலியானவை என்று உறுதியளிக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் யாரேனும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடுவது, உண்மைகளை சரிபார்க்காமல் வதந்திகளை வெளியிடுவது அல்லது பரப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.