சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் ஈரடுக்கு அதிவிரைவு மேம்பால சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கூவம் ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கூவம் ஆற்றில் கட்டுமானக் கழிவுகளை கொட்டி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆற்றில் கழிவுகள் கொட்டப்படுவதால் பருவமழை காலத்தில் இயற்கையாக நீர் செல்வது பாதிக்கப்பட்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. இதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யாநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அமர்வில் கடந்த 19 ஆம் தேதியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீர்வள ஆதரத்துறை வழக்கறிஞர் சண்முகநாதன் ஆஜராகி, “ஆற்றின் குறுக்கே கட்டட கழிவுகள் கொட்டுவதால் நீரோட்டத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக மூலம் ஆய்வு மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் முறையான ஆய்வை மேற்கொள்ளவில்லை. வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படும்” என வாதிட்டார்.
அதனைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில், “ஈரடுக்கு மேம்பால கட்டுமான திட்டம் என்பது ஆற்றின் மேல் பாலம் அமைப்பது. அதனால் தான் தூண்கள் அமைக்க ஆற்றின் குறுக்கே கட்டடக் கழிவுகள் கொட்டப்பட்டு தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படும்” என வாதிட்டார்.
இதையும் படிங்க:"குஜராத் போய் பாருங்க, அப்போ தான் உலகத் தரம் என்னானு தெரியும்" - மு.க.ஸ்டாலினுக்கு எல்.முருகன் ஆலோசனை!