தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறையாது....அமித்ஷா விளக்கம்! - AMIT SHAH IS CONFIDENT

2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி தெரிவித்துள்ளார்.

கோவை பொதுக்கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து கையசைக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா
கோவை பொதுக்கூட்டத்தில் தொண்டர்களைப் பார்த்து கையசைக்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா (Etv Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2025, 3:30 PM IST

கோவை:மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களில் ஒரு தொகுதி கூட குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திறந்து வைத்தார். விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "கோவை மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்பதற்காக வருத்தம் அடைகிறேன்.

வளர்ச்சிக்கு உதவும் பட்ஜெட்:3 மாவட்ட பாஜக அலுவலகங்களும் மக்களுடன் பணி செய்து மக்கள் கூடும் இடமாக மாற வேண்டும். 2025-26ஆம் ஆண்டுக்கான அருமையான பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். மத்திய தர வர்க்கத்தினர், விவசாயிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜகவை பொறுத்தவரை 2024ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். இந்த ஆண்டில்தான் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அதன் தொடர்ச்சியாக ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மஹாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதே போல 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.

தேசத்துக்கு எதிரான சிந்தனை:திமுகவின் தேச மற்றும் மக்கள் விரோத ஆட்சி முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது. வகுப்புவாதம், பிரிவினைவாதம் முடிவுக்கு கொண்டு வரப்படும். ஊழல், தேசத்திற்கு எதிரான சிந்தனைகள் வேரோடு அகற்றப்படும். பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மோடி தனது முத்திரையை பதித்து கொண்டு இருக்கிறார். தமிழ் மக்களின் வாழ்வியல், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை போற்றும் தலைவராக மோடி இருக்கிறார்.

கோவையில் பாஜக அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார் (ETV Bharat Tamil Nadu)

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து காணப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் போன்ற இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. வேங்கைவயல் சம்பவத்தில் 700 நாட்களுக்கு பிறகும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் கைது செய்யப்படுவதில்லை. புகார் அளிப்பவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் தேச விரோத சிந்தனை கொண்ட திமுக ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது.

போதைப்பொருள் கும்பல்கள் ஆட்சியாளர்கள் ஆதரவுடன் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஊழலில் திமுக தலைவர்கள் மாஸ்டர் டிகிரி பெற்றவர்களாக இருக்கிறார்கள். 2 ஜி ஊழல் வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஊழல் பெருச்சாளிகளை தேடித்தேடி திமுக உறுப்பினர்களாக சேர்க்கிறது. திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

தொகுதிகள் எண்ணிக்கை குறையாது:தொகுதி மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒரு தொகுதி கூட குறையாது. விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பால் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என மோடி உறுதியளித்து உள்ளார். இந்த விஷயத்தில் முதலமைச்சர் தமிழக மக்களிடம் பொய்யை சொல்லி ஏமாற்றி கொண்டு இருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.1,52,901 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. மோடி ஆட்சியில் ரூ.5,08,331 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியை விட 5 மடங்கு அதிக நிதி கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல திட்டங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு நிதி தரவில்லை என பொய் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு லட்சக்கணக்கான கோடியை ஒதுக்கி, நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் மோடியை ஒவ்வொரு வீட்டிற்கும் கொண்டு செல்ல வேண்டும்.

பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் பயன்படுத்திய புனிதமான செங்கோலை அலங்கரிக்க செய்தார். தமிழ்நாட்டில் தேஜகூட்டணி ஆட்சி அமையப்போவது உறுதி. மஹாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் பெற்ற வெற்றியை விட பெரிய வெற்றியை தமிழகத்தில் தேஜகூ பெறும்,"என்றார்.

நிந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details