நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேட்டி தூத்துக்குடி:திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், தேர்தலில் வெற்றி பெற சத்ரு சம்ஹார யாகம் வளர்த்து, சிறப்புப் பூஜை மற்றும் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "ஜூன் 4ஆம் தேதிக்கு மேல், 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று 3வது முறையாக மோடி பிரதமராக வர வேண்டும் என திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளோம்.
திமுக என்ன சொல்லி நடந்துள்ளது. திமுகவிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே கிடையாது. நாட்டில் நல்லது எதுவும் நடக்கக் கூடாது என்பதற்காக திமுக கண்ணும் கருத்துமாக உள்ளது. மக்கள் தீர்ப்பளிக்கும் போது, மோடி வரமாட்டார் என அவர்கள் எப்படிச் சொல்ல முடியும்?
திமுக தேர்தல் அறிக்கையைப் பார்க்கும் போது நகைச்சுவையாக உள்ளது. சிலிண்டர் விலையை 500 ரூபாய்க்கு எப்படி தர முடியும்? மத்திய அரசு தான் அதைத் தரமுடியும். ஏற்கனவே, ரூ.200 குறைப்பதாகச் சொன்னார்கள், குறைத்தார்களா?. அதேபோல, பெட்ரோல் டீசல் விலையையும் மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரமாக வழங்குவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
முதலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். கூட்டணியிலும் இல்லை. மத்திய அரசிடம் கேட்டு வாங்கி கொடுப்பது என்றால், அதை நாங்களே கொடுத்துவிடுவோமே. திமுக, காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. வெறும் 40 இடத்தில் தான் எம்பிக்கள் உள்ளனர். திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்று. சொல்லாமலே செய்வதுதான் மோடி” என்றார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கனிமொழி இருப்பதால்தான் நெல்லையில் போட்டியா என்பது குறித்துப் பேசிய அவர், “அது எப்படி பயமாகும்? திமுகவினர் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளட்டும். அதில் எங்களுக்கு ஒன்றும் பயமில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமென்றாலும் விமர்சனம் செய்யலாம். ஆனால், நாகரீகமான முறையிலான விமர்சனமாக இருக்க வேண்டும்” என பிரதமர் மோடி குறித்து அமைச்சர் அனிதா.ஆர்.ராதா கிருஷ்ணனின் விமர்சனத்திற்குப் பதில் அளித்தார்.
மேலும் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பாஜக 2வது இடத்திற்கு வரக்கூடாது என கனிமொழி எம்பி சொல்லக்கூடாது, அதை மக்கள் சொல்ல வேண்டும். அமலாக்கத்துறை எல்லோர் வீட்டிற்கும் செல்லாது. சம்பந்தப்பட்டவர்கள் வீட்டிற்குத்தான் செல்லும். நெருப்பில்லாமல் புகையாது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” என்றார்.
டெல்லி அரசியல் குறித்த கேள்விக்கு, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பின்பு இடைவெளி இருந்தது. பின் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் பிடித்ததால் பாஜகவிற்குச் சென்றேன். மக்களுக்கு மாநில அரசால் சில விஷயங்களைத் தான் செய்ய முடியும். ஆனால் மத்திய அரசால் பல விஷயங்களைச் செய்யலாம். ஆணவம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியவர் யார்.. ஆணவக்காரர் தான் ஆணவத்தை பற்றிப் பேசுவார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "டெல்லி வேண்டாம் தமிழகம் அரசியல் தான் பிடிக்கும்" - அண்ணாமலை கூறிய காரணம் என்ன? - BJP State President Annamalai