சென்னை: கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், பணத்தை கொண்டு வந்ததாக சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரை கைது செய்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட இந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கைமாற்றப்பட்டு நெல்லை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்பட்டதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும் மூவரும் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தற்போது தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்தவகையில், இதுவரை மொத்தமாக 15 நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்தும், தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த பலமுறை சிபிசிஐடி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியபோது, "தேர்தல் நடைபெறுவதால் தான் இப்போது விசாரணைக்கு ஆஜராக முடியாது; சட்டமன்ற கூட்டங்கள் நடைபெறுவதால் ஆஜராக முடியாது" என அவர் தரப்பில் இருந்து விளக்கங்கள் அளிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக கடந்த வாரம் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜுடன் ஆஜராகினார். இதனை அடுத்து, தனி அறையில் வைத்து எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலங்களை, சிபிசிஐடி போலீசார் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், ரயிலில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகும்படி மீண்டும் நைனார் நாகேந்திரனுக்கு, சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மன் அடிப்படையில், இன்று (ஜூலை 16) சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் தனது செல்போனுடன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் .
மேலும், இன்றைய விசாரணையில் நயினார் நாகேந்திரன் மட்டுமல்லாது, நெல்லை நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக பொறுப்பாளராக செயல்பட்ட முரளிதரன் மற்றும் நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் மணிகண்டன் ஆகியோரும் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். அவர்களுடன் பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜும் சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
இத்தகைய சூழலில், ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து நயினார் நாகேந்திரனிடம், சிபிசிஐடி போலீசார் தனி அறையில் விசாரணை நடத்தி வருவதாகவும், ஏற்கனவே பாஜக நிர்வாகிகள் உட்பட 15 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு கேட்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த விசாரணையானது மாலை வரை தொடரும் என சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை சிபிசிஐடி அலுவலகத்திற்கு நயினார் நாகேந்திரனின் மகன் பாலாஜியும் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:'சண்டாளர்' பெயரை பொதுவெளியில் பயன்படுத்தக்கூடாது: தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை