கோயம்புத்தூர்:மைவி3 ஆட்ஸ் நிறுவனம் தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாகவும், மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது என அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் அந்நிறுவனத்தின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர் சக்தி ஆனந்திற்கு சம்மன் அனுப்பினர். இதன் பேரில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சக்தி ஆனந்த் ஆஜராகி இன்று (பிப்.05) விளக்கம் அளித்தார். சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்கு பின், சக்தி ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கு குறித்து விசாரணை நடைபெற்றது. அதற்காக ஆஜராகி தனது விளக்கத்தை தெரிவித்தேன். இன்று காலை இதே நிறுவனம் வேறு பெயரில் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் அளித்தவர்களின் நிறுவனத்தில் நானும் பணிபுரிந்ததை ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி புதிய நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது அவர்கள் வந்து புகார் அளிப்பதற்கான நோக்கம் என்ன. தற்பொழுது இந்த நிறுவனம் ஊடக வெளிச்சம் பெற்ற பின்பு இது குறித்து பேசினால் தாங்களும் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் புகார் அளித்திருக்கலாம்.