தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நான் யாரையும் ஏமாத்தல.. வாடிக்கையாளர்கள் என்னை நம்புறாங்க.."- MYV3 நிறுவன உரிமையாளர் கூறுவது என்ன?

MY V3 ads issue: தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் தன்னுடைய வாடிக்கையாளர்கள் தன்னை நம்புகிறார்கள் என்றும் வாடிக்கையாளர்கள் ஒன்றுகூட முக்கிய காரணம் பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி தான் என்றும் MY V3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் தெரிவித்து உள்ளார்.

MY V3 owner sakthi ananth
MY V3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2024, 5:54 PM IST

MY V3 நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த்

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் வெள்ளக்கிணறு பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது Myv3 Ads என்ற நிறுவனம். இந்த நிறுவனம் மக்கள் பணத்தை நூதன முறையில் ஏமாற்றப் போவதாக பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் சமீபத்தில் கோவை காவல் மாநகர் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நிறுவனத்திற்கு ஆதரவாக கடந்த 29ஆம் தேதி சுமார் 5ஆயிரத்துகும் மேற்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் திடீரென திரண்டதால் நீலாம்பூர் புறவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து My V3 Ads உரிமையாளர் சக்தி ஆனந்த கூறுகையில், "தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் 60 லட்சம் மக்கள் எங்களின் வாடிக்கையாளராக இருக்கின்றனர். மேலும் My V3 Ads நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம். அதனை வாடிக்கையாளர்கள் வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி என்பவர் வேண்டுமென்று பழி சுமத்துவதற்காக, இதுபோல் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார். அது மட்டுமில்லாமல் காவல்துறை அதிகாரிகளிடம், தான் கட்சியில் இருப்பதாக மிரட்டி இந்த வழக்கை பதிவு செய்ததாக காவல்துறை தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

அசோக் ஸ்ரீநிதிக்கு எதிராக தனது வாடிக்கையாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மனு அளிக்க இருந்தனர். ஆனால், கோவை மையப்பகுதியில் ஆட்சியர் அலுவலகம் இருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தினால் மட்டுமே வாடிக்கையாளர்களை நீலாம்பூர் புறவழிச்சாலைக்கு செல்ல அறிவுறுத்தினோம்.

பின்னர் அங்கு சென்று அனைவரையும் போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்திய பிறகு வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் MyV3 Ads நிறுவனம் பொதுமக்களுக்கு தேவையான சித்தா, ஆயுர்வேதா பொருட்களை வழங்கியது. இதில் யாரிடம் எந்த விதமான பணமும் பெறவில்லை. MyV3 Ads நிறுவனம் நடத்தி வருவதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. எந்த அதிகாரிகளுக்கும் காண்பிக்க நான் தயாராக இருக்கிறேன்.

பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி போலியாக அளித்த புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டு My V3 Ads நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படும் விதமாகச் செயல்பட்டு வருகிறார். என்னுடைய அலுவலகம் மற்றும் குடோன் கோவை வெள்ளக்கிணறு பகுதியிலும், வீடு கோவை சரவணம்பட்டில் இருக்கிறது. இது சம்பந்தமாக யார் வேண்டுமானாலும் என்னை அணுகலாம். திரளான வாடிக்கையாளர்கள் வந்து கூடியதற்கு முக்கிய காரணம் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டும்தான்.

அப்படி நான் வாடிக்கையாளரை ஏமாற்றுபவனாக இருந்தால், நான் எதற்கு அங்கு வந்து வாடிக்கையாளரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு வலியுறுத்திருக்க முடியும். இந்தப் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் பாமகவைச் சேர்ந்த அசோக் ஸ்ரீநிதி தான். அவர் மீது கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்ட நபரை கட்சியில் வைத்திருப்பதனால் கட்சிக்கே அவப்பெயர் ஏற்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:மேத்யூ சாமுவேலுக்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: மாஸ்டர் நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!

ABOUT THE AUTHOR

...view details