ஆவடி காவல் ஆணையர் கீ.சங்கர் பேட்டி வீடியோ (Credits - ETV bharat TamilNadu) சென்னை:ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை எல்லியம்மன் நகர் பகுதியைs சேர்ந்தவர் பிரகாஷ். இவர் தனது வீட்டின் கீழ் நகைக்கடை மற்றும் அடகு கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த எப்ரல் 15ஆம் தேதி மதியம் 12 மணியளவில், கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் புகுந்த வட மாநில இளைஞர்கள் பிரகாஷின் கை கால்களை கட்டி போட்டு, கடையில் இருந்த 2.5 கிலோ தங்க நகைகள், பல கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்க பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
பின்னர், பிரகாஷின் உறவினர் கடையின் ஷெட்டர் மூடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, கடையின் ஷெட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, பிரகாஷ் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடையில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். தொடர்ந்து, கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கார் பதிவெண்ணையும் போலீசார் கண்டுபிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, சம்பவம் குறித்து 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டட்து. இதில் முதற்கட்டமாக, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார், கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த சேட்டன் ராம், தினேஷ்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய நபரான அசோக்குமார், சுரேஷ் ஆகிய இருவரையும் ராஜஸ்தானில் வைத்து கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து, அவர்களிடம் ஆவடி காவல் ஆணையர் கீ.சங்கர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து ஆவடி காவல் ஆணையர் கீ.சங்கர் கூறுகையில், “நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து துரிதமாக செயல்பட்டு, ராஜஸ்தானில் பதுங்கி இருந்து 2 குற்றவாளிகளை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடமிருந்து 700 கிராம் தங்க நகைகளையும், 4 கிலோ வெள்ளிப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 4 குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்த இருவரை ஏற்கனவே கைது செய்துள்ளோம். கொள்ளையர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், ராஜஸ்தான் மாநில காவல்துறையினருடன் ஒன்றாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்துள்ளோம்.
மொத்தமாக 2.5 கிலோ தங்க நகைகள் கொள்ளை போயிருந்த நிலையில், அதை குற்றவாளிகள் பங்கு போட்டுக் கொண்டனர். தற்போது இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்துக்கு முன்னதாக திருவண்ணாமலையில் ஒரு நகைக்கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்ட நிலையில், அது நடக்காமல் போயுள்ளது” என அவர் கூறினார்.
இதையும் படிங்க:அபாயச் சங்கிலி வேலை செய்யவில்லையா? கர்ப்பிணி உயிரிழப்பு குறித்து தெற்கு ரயில்வே விசாரணை! - Pregnant Woman Falling From A Train