திருப்பூர்:மாற்று மதக் கோயில் கட்ட தேவையான நிலத்தை தானமாக வழங்கியதோடு, இன்று (மே 26) நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகத்திற்கு மேளதாளம் முழங்க சீர்வரிசை பொருட்களுடன் வந்த இஸ்லாமிய மக்களை இந்து மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
திருப்பூர் மாவட்டம், படியூர் அடுத்த ஓட்டப்பாளையம், ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் உள்ளது. ஆனால், இந்து மக்கள் வழிபாடு செய்ய எந்த கோயிலும் இல்லாததால், இப்பகுதியில் விநாயகர் கோயில் ஒன்றை கட்ட வேண்டும் என மக்கள் எண்ணியுள்ளனர்.
இதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையால் தவித்து வருவதை அறிந்த இஸ்லாமியர்கள், அப்பகுதியில் உள்ள ஆர்.எம்.ஜே.ரோஸ் கார்டன் முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசலுக்குச் சொந்தமான ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தை கோயில் கட்ட தானமாக வழங்கினர்.