தேனி:தமிழக - கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. நடப்பாண்டில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சில மாதங்களாக மழை சரிவர பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
அதேபோல், அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 759 கன அடியாக அதிகரித்தது.
ஒரே நாளில் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 119.90 அடியாக உயர்ந்தது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த பலத்த கனமழையால் இன்று காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3759 கன அடியாக அதிகரித்தது. நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 53.4 மி.மீ., பெரியாறில் 74.8 மி.மீ., மழை பதிவானது. நீர் இருப்பு 2610 மில்லியன் கன அடியாக உயர்ந்தது.