தென்காசி: தென்காசி மாவட்டம், கடையத்தில் இருந்து ராமநதி அணைக்குச் செல்லும் பகுதியில் ஜம்புநதி ஆற்றங்கரையோரம் தட்டப்பாறை இடுகாடு என்ற இடம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பள்ளங்கள் தோண்டும் போது, முதுமக்கள் தாழி உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
அதனையொட்டி, கடந்த வாரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மாணவி ஒருவர் ஆய்வு மேற்கொண்டு, சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமத்தாழிகளைக் கொண்ட ஈமக்காட்டை கண்டுபிடித்துள்ளார். அதைத் தொடா்ந்து ஆய்வு செய்த பேராசிரியர்கள் முருகன் மற்றும் மதிவாணன், இந்த ஈமக்காட்டை ஒட்டி பண்டைய மக்களின் வாழ்விடம் இருக்கும் என கணித்தனர்.
அதனடிப்படையில், பேராசிரியர்களுடன் தொல்லியல் பட்ட மேற்படிப்பு படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களான பாலசண்முகசுந்தரம், முத்து அருள், இசக்கி, செல்வம் ஆகியோருடன் தொல்லியல் துறைத் தலைவரான (பொறுப்பு) பேராசிரியர் சுதாகரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த இடுகாட்டிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்களின் வாழ்விடம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.