கரூர்: கரூர் வாங்கல் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை தான் கூறும் நபர்களுக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் தொடர்ந்து அடியாட்களை வைத்து அச்சுறுத்தி தாக்கியதாக வாங்கல் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பிரகாஷ் அளித்த புகார் அடிப்படையில், ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில், கடந்த மாதம் சந்தேகப்படும் வகையில் நான்கு பேர் வழங்கிய ஆவணங்கள் பரிசீலனை செய்ததில், ஈரோடு சித்தார்த்தன், காஞ்சிபுரம் ரகு, கரூர் மாரப்பன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக மோசடியில் ஈடுபட்டு, தொழிலதிபர் பிரகாஷின் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முற்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூன் 18ஆம் தேதி திடீரென சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கில் தனது பெயரை சேர்க்கக்கூடும் என தாமாக முன் சென்று, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவினை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவுற்று, ஜூன் 25ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் இரண்டு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். அதன் மீதான விசாரணை, நேற்று நடைபெற்றது.