புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், "100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. ரேஷன் கடைகளில் குறைவான அளவில் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது.
இது போன்ற அன்றாட பிரச்சனைகளை பேசாமல் சித்தாந்தம்ரீதியான விவாதம் தேவையற்றது. சாமானிய மக்களை சந்திக்கும் போது பெரியாரைப் பற்றி கருத்துக்களை யாரும் கேட்கவில்லை. அன்றாட பிரச்சனைகளை மட்டுமே பேசுகிறார்கள்.
சமுதாயரீதியாக தமிழ்நாட்டு முதலமைச்சரை நிராகரிக்கிறார்கள் என்ற வாதத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. சில பஞ்சாயத்துகளில் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பொருளாதாரரீதியாக வளர்ச்சி ஏற்பட்டு விட்டால், சமுதாய வேறுபாடுகளும் களைந்து விடும். வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டுமென்ற திருமாவளவன் கருத்திருக்கு, சிபிஐ விசாரணை கோருவது அவருடைய விருப்பம்.
எம்பி கார்த்தி சிதம்பரம் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றால், எந்த காரணத்திற்காக இல்லை என்பதை நீதிமன்றத்தின் மூலமாகவே அதனை பெற வேண்டும். வேங்கைவயல் விவகாரம் வேதனை அளிக்கக் கூடியது.
தமிழ்நாடு அரசு வேங்கைவயல் விவகாரத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிக்கையின் படி உண்மையான விசாரணை நடக்கவில்லை என்றால் ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, இதற்கு மேல் வேறொரு அமைப்பு மூலம் விசாரணைக்கு கோருவது அவர்களின் உரிமை.
இதையும் படிங்க: சென்னை ஆவடியில் தயாரான சுரிநாம் நாட்டின் ராணுவ உடைகள்! - ARMY DRESS MANUFACTURING
தமிழ்நாடு அரசியல் மேடை எனக்கு வருத்தம் அளிக்கிறது. 21ஆம் நூற்றாண்டில் வல்லரசாக வேண்டும் என்று விரும்புகின்ற நாட்டிற்கு தேவையில்லாத விவாதங்கள் தான் நடக்கிறது. விஞ்ஞானரீதியாக, அறிவுப்பூர்வமாக, பொருளாதாரரீதியாக விவாதங்கள் நடைபெறாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. கனிமவள கொள்ளை இந்த ஆட்சியில் மட்டுமல்ல, காலங்காலமாக சட்டத்தை மீறி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.