வேலூர்:2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில், 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. திமுக தலைவரும், தமிழகத்தின் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவுரைப்படி, இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி முதல், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்தில், தமிழ்நாட்டு மக்களின் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக திமுக சார்பில் கனிமொழி எம்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் குறித்து பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து கருத்துக்களைக் கேட்டனர்.
அந்த வகையில், நேற்று (பிப்.23) வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, பரிந்துரைகளை மனுக்களாக அளித்தனர்.
திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வணிகர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு குறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், பெண்கள் நல அமைப்பு நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளின் அமைப்பு நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரும், தங்களின் மனுக்களை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனிமொழியிடம், தேர்தல் அறிக்கை குழு எல்லாம் கண்துடைப்பு என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு, ”பிரதமர் மோடி இரண்டு தேர்தலுக்கு முன்பு 15 லட்சம் ரூபாய் அனைவருடைய வங்கிக் கணக்கிற்கு வரும் என்று கூறினார். 15 லட்சத்திற்காக நாங்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறோம். 15 லட்சம் ரூபாய் அனைவருக்கும் போட்ட பிறகு, அண்ணாமலை மற்றவர்களை விமர்சிக்கும் உரிமை உண்டாகும்” என்று பதிலளித்தார்.