புதுக்கோட்டை:குடுமியான்மலை அருகே உள்ள ஓச்சப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் - வெள்ளையம்மாள் தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி மணிகண்டன் என்ற மகனும், ஜோதி மீனா என்ற மகளும் உள்ளனர். வெள்ளையம்மாள் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், முருகேசனும், வெள்ளையம்மாளும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் வெள்ளையம்மாள் அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஜோதி மீனா, வயலோகம் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவரை காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், ஜோதி மீனா கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது ஓச்சப்பட்டியைச் சேர்ந்த வேளாண் வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் எம்.பி.ஆறுமுகம் தலைமையில் பாலு, சரவணன், மோகன், முருகன், ஆறுமுகம் ஆகியோர் நெருக்கடி கொடுத்து வந்ததோடு, ஜோதி மீனாவை ஊருக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். மேலும், அபராதமாக ரூ.10 ஆயிரம் கட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதற்கு வெள்ளையம்மாள் ரூ.3 ஆயிரத்து 500 பணம் செலுத்தி விட்டு, ஊர் முக்கியஸ்தர்கள் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகும் வெள்ளையம்மாள் குடும்பத்தை ஊரை விட்டு தள்ளி வைப்பதாக கூறி, கிராமத்தில் நடைபெற்ற ஊர் திருவிழாவில் வரி வசூலிக்காமல், பெண்கள் நடத்தி வரும் சுய உதவிக் குழுவில் இருந்து நீக்கியுள்ளனர். அதில் உள்ள சேமிப்புக் கணக்கு தொகையான ரூ.40 ஆயிரத்தை தர முடியாது என்றும் கூறியுள்ளனர்.
மேலும், ஊர் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர். இதனால் வெள்ளையம்மாள், அன்னவாசல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அன்னவாசல் காவல் துறையினர் விசாரித்து வந்துள்ளனர்.