திண்டுக்கல்: "நான் நினைத்திருந்தால் 50 ஆயிரமோ , ஒரு லட்சமோ வயநாடுமக்களுக்காக கொடுத்திருக்க முடியும், ஆனால் பொதுமக்களும் இதில் பங்களிக்க வேண்டும் என நான் நினைத்தேன்" என்கிறார் திண்டுக்கல்லில் உணவகம் நடத்தி வரும் முஜீப். நகர்ப்பகுதியில் உள்ள இவரது உணவகத்தில் நேற்றிரவு (07.08.2024) 8 மணிக்கு துவங்கி தடல் புடலான மொய் விருந்து நடைபெற்றது.
இனிப்புடன் தொடங்கிய இந்த விருந்தில், சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, பரோட்டா, நெய் சோறு மற்றும் ஆனியன் ரைத்தா, பாயசம், என வரிசை கட்டின. வந்தவர்கள் போதும், போதும் என கூறும் அளவுக்கு உணவு வகைகள் கேட்டுக் கேட்டு பரிமாறப்பட்டன. வயிறார சாப்பிட்ட பின்னர் , இலைக்கு அடியில் தங்களால் முடிந்த நிதியை வைத்துவிட்டுச் சென்றனர்.
இந்த நிதி கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை சென்று சேரும் என்கிறார் முஜீப். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழர்களின் கலாச்சாரத்தில் பண்டைய காலத்திலிருந்தே, மொய் விருந்து என்ற வழக்கம் இருந்து வருகிறது. வறுமையால் நொடிந்தவர்கள் இது போன்ற விருந்து நடத்தி அதில் கிடைக்கும் பணத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள். இதே போன்ற பாரம்பரிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என நாங்கள் நினைத்ததன் விளைவு தான் இந்த மொய் விருந்து" எனக் கூறினார்.
"நான் மட்டும் பணம் கொடுத்து உதவினால் போதாது. என்னைச் சுற்றியுள்ளவர்களும், நண்பர்களும், உறவுகளும் இதில் பங்களிக்க வேண்டும் என நான் விரும்பினேன். இதற்காக மொய் விருந்து நடத்திய போது, ஏராளமானவர்கள் திரண்டு வந்து ஆதரவு அளித்தனர். இது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறினார் முஜீப்.
இது குறித்து மொய் விருந்தில் கலந்து கொண்ட ராஜேஸ்வரி கூறுகையில், "வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்த மொய் விருந்தை ஏற்பாடு செய்து உள்ளனர். இந்த மொய் விருந்தின் நோக்கமே வயிறார உணவு அருந்திவிட்டு, அவர்களால் முடிந்ததை இலைக்கு அடியில் வைத்துவிட்டுச் செல்வர்.இது பாராட்டப்படக் கூடிய ஒன்றாகும். எங்களால் முடிந்ததை நாங்கள் நிதியாகக் கொடுத்து உள்ளோம். இதனால் எங்களுடைய வயிறும் மனதும் நிறைவடைந்துள்ளது" என தெரிவித்தார்.
நேற்று இரவு 8 மணி 10 மணி வரை இந்த விருந்து நடைபெற்றது. மேலும் அங்கே வைக்கப்பட்டு இருந்த உண்டியலிலும் சிலர் பணம் செலுத்தினர். அப்போது சிறுவர் ஒருவர் தான் சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த சில்லறைக் காசுகளை நிவாரண நிதிக்காக வைக்கப்பட்டு இருந்த உண்டியலில் செலுத்தினார். இது அங்குள்ளவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. மேலும் ஒருவர் 10 ஆயிரம் ரூபாய்கான் காசோலையை வழங்கினார். இந்த மொய் விருந்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பணம் அனைத்தும் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.