சென்னை:திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாவின் 55வது நினைவு நாள் நாளை (பிப்.03) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்காகச் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கான வெற்றி வியூகத்தை வகுக்க வேண்டிய பொறுப்பு நிறைந்த இடத்தில் இருக்கிறது, திராவிட முன்னேற்றக் கழகம். பாசிச பாஜக ஆட்சியின் சர்வாதிகார, ஜனநாயக விரோத போக்கிற்கு முடிவுகட்ட வேண்டிய உறுதியுடன் இருக்கிறோம்.
மக்கள் தாங்கள் விரும்பிய மொழியில் பேசுவதை, விரும்பிய தொழிலைச் செய்வதை, விரும்பிய உடையை உடுத்துவதை, விரும்பிய உணவை உண்பதை, விரும்பிய அரசைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்வதற்கும், இவற்றுக்கு அடிப்படையான மாநில உரிமைகளை கட்டிக் காப்பதற்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, தேர்தல் களப் பணிகளை முன்கூட்டியே தொடங்கி, மிகுந்த உற்சாகத்தோடு அதனை முன்னெடுத்துச் செல்கிறது திமுக.
சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்பதுதான் திமுகவின் தேர்தல் வாக்குறுதி. அக்கவுண்ட்டில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்றோ, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்றோ, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குவோம் என்றோ வாக்குறுதி அளித்துவிட்டு, எல்லாமே ஜும்லா என்று ஏமாற்றுகின்ற பாஜக போலவோ, அதன் கள்ளக்கூட்டணியான அதிமுக போல திமுகவின் நாடாளுமனறத் தேர்தல் வாக்குறுதிகள் இருக்காது.
தினமும் 4 தொகுதிகள் வீதம், இதுவரை 22 நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் ஒவ்வொன்றும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டமாக மட்டுமில்லாமல், திமுகவினர் சுட்டிக்காட்டும் பிரச்னைகளுக்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கும் உடனுக்குடன் தீர்வு காணும் கூட்டமாகவும் இருப்பது திமுக நிர்வாகிகளை மிகுந்த உற்சாகத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது என்பதை அறிகிறேன்.
“வெல்லும் சனநாயகம்” மாநாட்டில் நான் குறிப்பிட்டதுபோல, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம்தான். அதிமுகவை வைத்து பாஜக எத்தகைய நாடகத்தை நடத்தினாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி.