திருவள்ளூர்: ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், என் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்', 'நான் முதல்வன்', 'புதுமைப்பெண்', 'கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்' என தமிழ்நாட்டில் இருக்க, பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என்று உங்களுடைய முன்னேற்றத்திற்கும், எதிர்காலத்திற்கும் முதலமைச்சராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு, பாடுபடக்கூடிய எண்ணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கிறது.
பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுடைய பசியைப் போக்கவேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கிய திட்டம்தான், இந்த காலை உணவுத் திட்டம். சென்னையில், ஒரு பள்ளி விழாவிற்கு சென்றபோது, ஒரு குழந்தை, “இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை" என்று சொன்னதை கேட்டவுடனே, ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வுடன் நான் உருவாக்கிய திட்டம்தான், இந்த காலை உணவுத் திட்டம்.
அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியோட ஸ்கூல்ல தவிக்க கூடாது என்று இந்தத் திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இன்றைக்கு பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறேன்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கு இல்லையா? என்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் கேட்டார்கள். அதனால்தான், கிட்டத்தட்ட 18 லட்சத்து 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் வயிறார சாப்பிட காரணமான இந்த திட்டத்தை இன்றைக்கு விரிவுபடுத்தியிருக்கிறேன்.