சென்னை:சென்னையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடத்தப்படும் (Umagine TN) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை , முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.23) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் பொருளாதார வளர்ச்சியும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும். நான் அளித்த பொறுப்பை அவர் திறம்படச் செய்து வருவதற்கு இந்த மாநாடே உதாரணம்.
இந்தியாவிலேயே, முதன்முதலாக 1997-இல் ஐடிக்கென தனி பாலிசி, ஐடிக்கென தனித் துறை, டாக்ஸ் போர்ஸ் தமிழ்99 ஐடி துறையில் தமிழ் ஒரு மாபெரும் பாய்ச்சல் கருணாநிதி ஆட்சியில்தான் ஆரம்பித்தது. நாட்டின் முதல் ஐடி பார்க்கை உருவாக்கியதன் மூலம், கருணாநிதியை 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி' என அழைக்கிறோம். ஐடிக்கு கருணாநிதியின் காலம் எப்படி பொற்காலமோ, அதேபோல, திராவிட மாடல் ஆட்சியும் இருக்கும். ஆகவேதான், தமிழ்நாடு தரவு மைய கொள்கை 2021 உள்ளிட்ட கொள்கை முடிவுகளை அரசு வெளியிட்டுள்ளது.
உலக மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்:அதோடு, பொது - தனியார் கூட்டு முறையில், தகவல் தொழில்நுட்ப நகரங்களும், டைடல் பூங்காக்களும் உருவாக்க தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டமைப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம். இதில், அனைத்து தகவல் தொழில்நுட்ப அமைப்புகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், 5ஜி அலைக்கற்றை அமைப்பை துரிதப்படுத்தினோம். தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவது, இரண்டாவதாக உலகத்தின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்றுவது என்பதற்காக முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்து வருகிறேன். வளர்ச்சியை எண்களில் மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கைத் தரத்திலும் காட்டுகிறோம்.
ஆங்கிலம் அல்லா மொழியில் முதலில் நடந்த AI-மாநாடு:இதில் எல்லா துறைகளைப் போல, இந்த தகவல் தொழில்நுட்ப துறையும் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ஐடி துறையின் வளர்ச்சியின் முன்னேற்றமும், நம் கண் முன்னே தெரிகிறது. கருணாநிதி தமிழ்நெட் 99 (Kalaignar Tamilnet99) மாநாட்டை நடத்தி 25 ஆண்டுகள் ஆகும் நிலையில், தமிழ் இணையம் கல்விக்கழகம் சார்பாக, தனித்தமிழ் 24 மாநாட்டை நடத்தினோம். 10 நாடுகளைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிஞர்கள், தொழில்துறை வல்லுநர்கள் என இதில் பங்கேற்றனர். செயற்கை நுண்ணறிவு (AI) கல்வியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வதற்காக, இந்தியாவிலேயே முதல்முறையாக ஆங்கிலம் இல்லாத மொழியில், ஒரு தொழில்நுட்ப மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளதுதான் திராவிட மாடல் ஆட்சி.
ELCOT-இல் அனுமதி வழிமுறைகள், அதனை மேம்படுத்தியதன் மூலம் 5ஜி அலைக்கற்றை நடைமுறைப்படுத்தலை துரிதப்படுத்தியுள்ளோம். நீண்ட காலமாக இருந்த தடையை நீக்கி, பைபர் நெட் அமைப்பை விரைவுபடுத்தியுள்ளோம். 'நான் முதல்வன்' திட்டத்தில், ஐசிடி வழியாக பயிற்சித் திட்டங்களை அதிகரித்துள்ளோம்.