சென்னை: 2009-ஆம் ஆண்டில் பேரவையில் அறிமுகம் செய்து நிறைவேற்றிய அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்றுபல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பு உண்மையிலேயே மக்களுக்குப் பயனளித்திடும் வகையில் திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் பெற்றுள்ள வெற்றிக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான பரிசு என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் அருந்ததிய மக்களின் அவல வாழ்வை அகற்றிட கலைஞர் 2008-ஆம் ஆண்டில் திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் 25.3.2008 அன்று குழு அமைத்தார். அக்குழு வழங்கிய பரிந்துரையின்படி ஆதிதிராவிட மக்களுக்குள், அருந்ததியின மக்கள் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி; ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 27.11.2008 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது.
அந்த முடிவின்படி, சட்டம் இயற்ற முனைந்தபோது கலைஞர் உடல்நலம் குன்றி சென்னை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது. அப்பொழுது கலைஞர் அறிவுரைப்படி, தமிழ்நாடு அரசின் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்த இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அருந்ததியினருக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை பேரவையில் 26.2.2009 அன்று அறிமுகம் செய்து நிறைவேற்றினார். 29.4.2009 இல் இது தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த வேளையில் 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.