தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"கையும் களவுமாக சிக்கியுள்ளது பாஜக" - தேர்தல் பத்திரம் குறித்து மு.க.ஸ்டாலின் தாக்கு!

M K Stalin On Election Bond Issue: பாஜக யார் யாரிடம் எத்தகைய நெருக்கடி கொடுத்து தேர்தல் நிதியைப் பெற்றுள்ளது என்பது கவனத்திற்குரியது எனவும், அது தற்போது கையும் களவுமாக சிக்கியுள்தாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Chief Minister M K Stalin Explanation About The Electoral Bond
Tamil Nadu Chief Minister M K Stalin Explanation About The Electoral Bond

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 9:31 PM IST

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனியார் ஆங்கில நாளேட்டிற்கு வழங்கிய நேர்காணல் பேட்டியின்போது, தேர்தல் பத்திர வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நம்பிக்கையளிக்கிறது. ஆனால், இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் மற்றும் எஸ்.பி.ஐ தெரிவித்த பதில் அந்த அமைப்புகளின் சுதந்திரத்தன்மை மற்றும் நேர்மையைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கியுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்த கேள்விக்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்திய மக்களின் கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றம் உள்ளது. அதன் உத்தரவுகளையே புறக்கணிக்க நினைப்பதும் மற்றும் காலம் தாழ்த்த நினைப்பதும் அரசமைப்புக்கு எதிரான செயல். ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள இந்தியாவின் கறுப்புப்பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவேன் என்று சொன்ன மோடி தலைமையிலான பாஜக அரசு, அதில் ஒரு நயா பைசாவைக்கூட மீட்காமல், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய்களைப் பல நிறுவனங்களிடம் இருந்து நிதியாகப் பெற்று, நீதிமன்றத்தையே ஏமாற்ற நினைத்தது அம்பலமாகியுள்ளது" என்று தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, திமுகவும் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றுள்ளது எனக் கூறி, பாஜக தங்கள் மீதான விமர்சனத்தில் இருந்து நழுவுகிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது முதலமைச்சர், "திமுக என்பது தனது முதல் தேர்தல் களத்தில் இருந்தே தேர்தல் நிதி திரட்டுகிற இயக்கம்தான். 1967-ஆம் ஆண்டு தேர்தலின்போது ரூ.10 லட்சம் என்கிற தேர்தல் நிதி இலக்காக நிர்ணயித்தார் பேரறிஞர் அண்ணா. ஆனால், 11 லட்சம் ரூபாயை, தேர்தல் நிதியாகத் திரட்டித் தந்தார் கலைஞர்.

திமுக-வினர் நிதி திரட்டுவது என்பதும் மற்றும் அந்த தேர்தல் நிதி குறித்த கணக்குகளை முறையாகத் தணிக்கை செய்வது என்பதும் வழக்கமான செயல்பாடுதான். இப்போதும் அதே வெளிப்படையான தன்மையுடன்தான் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டியிருக்கிறோம். ஆனால், திமுக உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளைக் குறையாகவும், குற்றமாகவும் சொல்லிக்கொண்டிருக்கும் பாஜக-வின் யோக்கியத் தன்மை என்ன என்பதும் மற்றும் பாஜக யார்? யாரிடம்? எதற்காக? எத்தகைய நெருக்கடி கொடுத்துத் தேர்தல் நிதியைப் பெற்றுள்ளது என்பதும் கவனத்திற்குரியது. தற்போது கையும் களவுமாகச் சிக்கியுள்ளது பாஜக" என்று பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க:தேர்தல் பத்திரம்: ரூ.650 கோடி நன்கொடை பெற்றதா திமுக? யார் கிட்ட இருந்து தெரியுமா? தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?

ABOUT THE AUTHOR

...view details