தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"இந்த நிதியாண்டின் இறுதிக்குள் தமிழக மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 9 பில்லியன் டாலராக உயரும்" - டி.ஆர்.பி.ராஜா உறுதி - Industry investment conferences

Minister TRB Rajaa Statement: நடப்பு நிதியாண்டில் 10 மாத காலகட்டத்திற்குள்ளாகவே, 7.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் 9 பில்லியன் டாலர் எய்தி தமிழ்நாடு புதிய சாதனை படைக்கும் என்று வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

Minister TRB Rajaa
டி.ஆர்.பி.ராஜா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 29, 2024, 10:50 PM IST

சென்னை:தொழில் முதலீட்டு மாநாடுகள், முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஈர்க்கப்பட்ட தொழில் முதலீடுகளின் காரணமாக ஒரு தொழில் புரட்சியை நோக்கி தமிழ்நாடு அரசு தொழில் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தொழில் முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர், தொழில் முதலீட்டு மாநாடுகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார்கள். இதன் காரணமாக ஒரு தொழில் புரட்சியை நோக்கி தமிழ்நாடு அரசு தொழில் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் தொழில் துறையில் உயர்ந்த தொழிற் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி விரைவுபடுத்தப்படுகிறது. மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக விளங்கிடும் தமிழ்நாடு, தொடர்ச்சியாக அதனை உறுதிப்படுத்தி வருகின்றது.

மின்னணுவியல் ஏற்றுமதி தற்போது 7.37 பில்லியன் டாலரை அடைந்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியே 22.65 பில்லியன் டாலர் எனும்போது, தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 32.52 சதவிகிதம் ஆகும். இதற்கு முந்தைய நிதியாண்டில் (2022-2023) மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி 5.37 பில்லியன் டாலர் ஆகும்.

இந்தத் தரவுகளை ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டில், அதாவது 2023-2024 ல் 10 மாத காலகட்டத்திற்குள்ளாகவே, 7.37 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுப் பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் மாநிலத்தின் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 9 பில்லியன் டாலர் எய்தி புதிய சாதனை படைக்கும்.

மின்னணுப் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில், தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது என்றால், அதற்குப் பல காரணிகள் உள்ளது. தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம்; முனைப்பான ஆளுமை; கொள்கை சார்ந்த அணுகுமுறை; வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படும் நிர்வாகம்; உற்பத்தி மற்றும் துல்லியப் பொறியியலில் சிறந்து விளங்குதல்; உயர்தர தொழில்நுட்பங்களைக் கையாளும் திறன் போன்ற பல சிறப்பம்சங்களைக் கொண்டு, இத்தகைய அபார வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டுள்ளது.

இந்த அபரிமிதமான வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், இத்துறையில் கொட்டிக் கிடக்கும் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அன்மையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் கொள்கை 2024 வெளியிடப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள், இத்துறையின் வளர்ச்சியை நன்கு துரிதப்படுத்தி, 2 லட்சம் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்குவதே, இந்தக் கொள்கையின் உயரிய நோக்கமாகும்.

பல்வேறு துறை சார்ந்த முதலீட்டாளர்களுடன் தொடர்ச்சியாக நல்லுறவுகள் மேற்கொண்டு வருவதன் மூலம், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமாகக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறது. மிகச் சிறந்த மனித வளம், அனைத்துத் துறைகளும் மேம்படும் வகையில் அமைந்துள்ள சிறப்பான சூழலமைப்பு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி போன்ற வலுவான அம்சங்களைத் தமிழ்நாடு பெற்றுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இறுதியாகாத மக்கள் நீதி மய்யம் உடனான தொகுதிப் பங்கீடு.. வெளிநாடு பயணத்தை தள்ளிவைத்த கமல்ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details