தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்மேற்கு பருவமழை; மின்சாரத் துறையின் ஆயத்தப் பணிகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு! - THANGAM THENNARASU

TN South West Monsoon precaution:தென்மேற்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று ஆய்வு செய்தார்.

MINISTER THANGAM THENNARASU
MINISTER THANGAM THENNARASU (Credit - ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 4:42 PM IST

சென்னை:தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், எதிர் வரும் தென் மேற்கு பருவமழையினை எதிர்கொள்ள மின்சாரத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 12 மண்டலங்களில் உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் திட்டப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு செய்தார்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக மாநிலத்தின் மின்சார தேவை அதிகரித்தது, கடந்த மே 2ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தின் மின் தேவை 20 ஆயிரத்து 830 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது. குறிப்பாக, சென்னையின் உச்ச பட்ச மின் தேவை, இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து, மே 31ஆம் தேதி 4 ஆயிரத்து 769 மெகா வாட் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இதுவரை இல்லாத அளவிற்கு மாநிலத்தின் மின்சாரத் தேவை உச்சத்தை எட்டிய போதும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், வெளி மின்சந்தை, மின் பரிமாற்றம் மற்றும் குறுகிய கால ஒப்பந்தம் மூலமாக எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்பட்டது. மேலும், மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லாமல், மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காக, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை, 25 லட்சத்து 46 ஆயிரத்து 634 ஒருங்கிணைந்த பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் 86 ஆயிரத்து 508 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன. சாய்ந்த நிலையில் இருந்த 53 ஆயிரத்து 844 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன.

புதியதாக 38,546 மின் கம்பங்கள் இடைசெருகல் செய்யப்பட்டிருக்கின்றன. 2,54,924 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. 69,337 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன எனவும், இதுதவிர்த்து சுமார் 1,137 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டிருக்கின்றன.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இதுவரை 5,126 பில்லர்கள் பாக்ஸ்கள் தரைமட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன. கூடுதல் மின் சுமை மற்றும் குறைந்த மின் அழுத்தம் கண்டறியப்பட்ட 4,194 மின்மாற்றிகளில், இதுவரை 2,550 மின் மாற்றிகள் கூடுதலாக நிறுவப்பட்டு, மின் பகுப்பு செய்யப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 1,644 மின்மாற்றிகள் கூடுதலாக நிறுவும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.

மேலும், எதிர்வரும் தென்மேற்கு பருவமழையினை எதிர்கொள்வதற்கும், மழை காலங்களில் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வுசெய்யப்பட்டது. மின் பராமரிப்பு பணிகளான, பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றுதல், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை மாற்றுதல், பழுதடைந்த மின்பகிர்மான பெட்டிகளை சரி செய்வது போன்ற பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

எந்தெந்தப் பகுதிகளில் உள்ள மின்மாற்றிகள் கூடுதல் மின்சுமையுடன் உள்ளன, எந்தெந்த பகுதிகளில் என்பதை கண்டறிந்து, மின் மாற்றிகளின் தரம் உயர்த்துதல் மற்றும் புதிய மின் மாற்றிகளை நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. மின் தளவாட பொருட்களின் இருப்பு மற்றும் தேவை மற்றும் மின்தடை ஏற்படின் உடனடியாக நிவர்த்தி செய்து நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வழிவகை செய்ய அறிவுறுத்தப்பட்டது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கக்கூடிய துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள் மற்றும் பில்லர் பெட்டிகள் ஆகியவற்றில்உரிய முறையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தனிக்கவனம் செலுத்திமின்நுகர்வோரிடமிருந்து வரும் புகார்கள் மீது தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறும், மேலும், தமிழ்நாடெங்கும் உள்ள இதர துணை மின் நிலையங்கள், மின்மாற்றிகள்மற்றும் மின்பாதைகளில் முறையான பராமரிப்பு பணிகளை உரிய முறையில்மேற்கொள்ளுமாறு அனைத்து அலுவலர்களையும் கேட்டுக் கொண்டார்.

பராமரிப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்ட மின் நிறுத்தங்களின் போது, மின்நிறுத்த நேரம் குறித்து மின் நுகர்வோர்களுக்கு முன்னரே குறுந்தகவல் (SMS) மூலம்தகவல் தெரிவிக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து மின் பகிர்மான வட்டமேற்பார்வைப் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

எதிர்வரும் பருவமழையினை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகளை கண்டறிந்து, அப்பணிகளை துரிதமாக செய்து முடிக்க அனைத்து மின் பகிர்மான தலைமை மற்றும் மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: "கடன் பணத்தை வசூலிக்க வேண்டாம்" - வைரலான ஊர் நாட்டாமை வைத்த அறிவிப்புப் பலகை! - Sivakasi Debt Issue

ABOUT THE AUTHOR

...view details