திண்டுக்கல்:கொடைக்கானலில் மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் பகுதிகளில் இருந்து குறைந்த செலவில் தங்கி மலைகளின் இளவரசியான கொடைக்கானலின் அழகைக் கண்டு ரசிக்க ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி, அமுதகம் உணவு விடுதி, நட்சத்திர ஏரியில் படகு குழாம் ஆகியவற்றை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செயல்படுத்தி வருகின்றது. மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், பழனியிலிருந்து திருப்பதிக்கு ஆன்மீக சுற்றுலா பேருந்து சேவை துவக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் துவக்கப்பட்டுள்ள இந்த ஆன்மீக பயணத் திட்டத்தை தமிழக உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், இந்த துவக்க விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர், பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தண்டபாணி நிலையத்திலிருந்து துவங்கிய முதல் பயணத்தில் பக்தர்கள் உற்சாகமாகப் புறப்பட்டு சென்றனர். மேலும் வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை அன்று திருப்பதி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை பழனி வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயண விவரம்:திண்டுக்கல் மாவட்ட மக்களின் வேண்டுகோளுக்கிணங்க, திண்டுக்கல் மாவட்டத்தின் ஆன்மீக சுற்றுலாத்தலமான பழனியிலிருந்து திருப்பதிக்குச் சுற்றுலா பேருந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் துவங்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு பழனியிலிருந்து புறப்பட்டு, திண்டுக்கல் வழியாக சனிக்கிழமை காலை ராணிப்பேட்டை சென்றடையும்.
பின்னர், ராணிப்பேட்டையில் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்களை தயார் செய்து கொண்டு, திருப்பதி சுற்றுலா பயணத்தை மேற்கொள்வார்கள். தொடர்ந்து, திருப்பதியில் தமிழ்நாடு சுற்றுலா கழகத்திற்கு தேவஸ்தானம் சிறப்பு அனுமதியாக வழங்கியுள்ள விரைவு தரிசன அனுமதிச் சீட்டின் மூலம் தரிசனம் கொள்வார்கள்.