புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில், பொதுத்துறை (மறுவாழ்வு) சார்பில் தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.2 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 58 வீடுகள் திறப்பு விழா மற்றும் புதிய மின் மாற்றி திறப்பு விழா ஆகியவற்றில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு திறந்துவைத்தார். பின்னர், ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
உச்சநீதிமன்றத்தில் பதிவாளர் அறிக்கை தாக்கல்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டவர்களின் வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்சநீதிமன்றம் கூறி இருக்கிறது. அவர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார் என்று எண்ணுகின்றோம்.
இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை: இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக நிறையக் கோப்புகள் ஆளுநரிடம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், சிறிய அளவிலான கோப்புகளுக்கு அனுமதி தந்துள்ளார். இன்னும் கோப்புகள் உள்ளன.
இஸ்லாமியர்கள் சிறைவாசிகளைப் பொறுத்தவரை நாங்கள் எடுத்த நடவடிக்கையைப் போல் எந்த அரசும் எடுக்கவில்லை. இஸ்லாமிய சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக அனுப்பப்பட்ட கோப்புகளில், சில கோப்புகளுக்கு கையொப்பமாகி உள்ளன. இன்னும் ஆளுநருக்கு அனுப்ப வேண்டிய கோப்புகளும் உள்ளன.
கோடநாடு வழக்கு: கோடநாடு வழக்கில், தடயவியல் அறிக்கையினைப் பொறுத்து அடுத்தகட்ட விசாரணை நகரும். ஓபிஎஸ், ஈபிஎஸ் என எல்லாரும் பாஜகவிடம் கொத்தடிமைகளாக அவர்களது கட்சியை அடகு வைத்துள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை, கோடநாடு வழக்கு குறித்து பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. எங்களைப் பொறுத்தவரை, கோடநாடு வழக்குக்கு புத்துயிர் கொடுத்து செயல்பட்டு வருகிறார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் எடுத்த நடவடிக்கை தான் வழக்கு இதுவரை நகர்வதற்குக் காரணம்.
அமலாக்கத்துறை சோதனை: எந்த நேரத்திலும் அமலாக்கத்துறையை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம். இன்றைக்கும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை என யார் வந்தாலும் வரட்டும்; பிரச்னை எதுவும் இல்லை. மடியில் கனம் இருந்தால்தான், வழியில் பயமிருக்கும். எங்களுக்கு எந்த மடியிலும் கனமும் இல்லை. வழியில் பயமும் இல்லை; வந்தால் தயாராக இருக்கின்றோம். காபி, விருந்து வைத்து உபசரிக்கவும் தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:எம்ஜிஆர் செய்ததில் 20% செய்யுங்கள் - விஜய்க்கு தயாரிப்பாளர் கே.ராஜன் அறிவுரை!