சென்னை:தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியல் வாதிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் திமுகவை, பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி ஆகியோர் கூட்டாக இன்று (மார்ச் 10) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரகுபதி பேசுகையில், திமுகவை களங்கப்படுத்த பாஜக செய்யும் அரசியல் தமிழ்நாட்டிலும், அகில இந்திய அளவிலும் எடுபடாது.
வருமானவரித்துறை, அமலாக்கதுறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைத்த பாஜக இப்போது மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவையும் புதிதாக களத்தில் இறக்கி உள்ளது. அதற்கு துணையாக அதிமுகவும் துதி பாடிக்கொண்டிருக்கிறது. போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிகிற்கு பிப்ரவரி 15ஆம் தேதி 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்ட நிலையில் பிப்.21ஆம் தேதி மங்கை திரைப்பட நிகழ்ச்சியில் ஜாபர் சாதிக் பங்கேற்றபோது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு எங்கே சென்றது?
ஜாபர் சாதிக் கைது; அரசியல் பின்னணி என்ன?:ஜாபர் சாதிக் கைதும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் செய்தியாளர் சந்திப்பும் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக தான், ஒரு விசாரணை அமைப்பின் துணை இயக்குனர் செய்தியாளர்களை சந்திக்கிறார். ஒரு விசாரணை முழுமையாக நடைபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் அதற்கு முன்னதாகவே செய்தியாளர்களை சந்திக்கிறார்கள்.