ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ் பவானி வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதால் இந்தாண்டு திறப்பதற்கு முன்பாக ஒரு சில இடங்களில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பெருந்துறை அருகே வாய்க்கால் மேட்டு பகுதியில் கீழ் பவானி சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பணிகளை துரிதமாக செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “பவானிசாகர் அணையிலிருந்து 15ஆம் தேதி கீழ் பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கீழ் பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகள் நீதிமன்றம் வழிகாட்டுதல் படி செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது. கீழ் பவானி வாய்க்காலில் ஒருசில இடங்களில் உள்ள பிரச்னை குறித்து விவசாயிகள் சொல்வதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15ஆம் தேதிக்குள் ஏதாவது ஒரு பணியை செய்ய முடியாமல் போனால், அடுத்த சீசனில் பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கீழ் பவானி வாய்க்காலில் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் தண்ணீரை எடுப்பவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். வணிக நோக்கத்தோடு எடுக்கப்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே நேரத்தில், விவசாயத்திற்கு உரிமை இல்லாத நேரத்தில் தண்ணீர் எடுப்பது நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். வணிகத்திற்காகவும், விவசாயத்திற்காக எடுக்கும் நபர்களை ஒரே மாதிரி கருத மாட்டோம். பாண்டியாறு - புன்புழா திட்டம் குறித்து கமிட்டி போடப்பட்டுள்ளது. இது குறித்து விசாரித்து விரிவாக சொல்கிறேன். பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருப்பதால் அத்திக்கடவு அவிநாசி திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார்.