ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்கிற பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிடோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "வாஜ்பாய் காலத்தில் திமுக ஆட்சியிலிருந்த போது தான் பொக்ரான் அணுக்குண்டு சோதனை செய்து மற்ற நாடுகள் பயப்படும் அளவிற்கு நம் நாட்டை பெருமைப் படுத்தினார். அதே வாஜ்பாய் கட்சியிலிருந்து வந்த மோடி 2014-ஆம் ஆண்டு அறிவித்து மதுரையில் 2019-ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்று வரை திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மதிப்பீடு செய்யப்பட்ட ரூ.1900 கோடி நிதியைக் கேட்டால் மத்திய அரசு ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்டுள்ளோம் வந்தவுடன் கட்டுவதாகச் சொல்கிறார்கள். எந்த விதத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு வருவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் அடிக்கல் நாட்டுடன் உள்ளது.
இதுமட்டும் அல்லாது, ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்; விவசாயிகளின் விளை பொருட்களுக்குத் தகுந்த விலை உருவாக்கப்படும் என்றெல்லாம் சொல்லி பாஜக ஆட்சிக்கு வந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று அதற்கு மாறாக டெல்லியில் 5 மாநில விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் நிலையில் அவர்கள் மீது ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசுகிறார்கள். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு மோடி அரசு செவி சாய்க்கவில்லை.