தூத்துக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 253வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதில், நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது, “மாநில அரசின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்து கொண்டது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதனை அரசியலாக பார்க்கக்கூடாது. ஆளுநர் ஆண்டுதோறும் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம். திமுகவினர் இந்த ஆண்டு கலந்துள்ளனர்.
கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாங்கள் வேல் யாத்திரையை நடத்தினோம். அதற்கு முருக பக்தர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு வங்கி மாறிவிடுமோ என்ற பயத்தில் திமுக தற்போது முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறது. மெட்ரோ ரயில் தொடர்பான பயன்பாட்டுத் தணிக்கை அறிக்கையை தமிழக அரசு இதுவரை அளிக்கவில்லை. அறிக்கைகளை அளித்தால் உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி வழங்கப்படும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதல் விவகாரத்தில், மாநில அரசால் நடவடிக்கை எடுக்க முடியாததால் தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தால் 6 மணி நேரத்திற்குள்ளாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது” என்றார். தொடர்ந்து, திமுகவின் ஆதரவை பெற வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளதா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. திமுகவின் உதவி தேவையில்லை ” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு வங்கி மாறிவிடுமோ என்ற பயத்தில் திமுக தற்போது முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்துகிறத என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதற்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து நெல்லை, இடிந்தகரையில் செய்தியாளர்களைச் சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசியதாவது, “இந்துக்கள் ஓட்டுக்கள் பாஜகவிற்கு போகாது. பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் தான் இந்துக்கள்.