சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. தற்போது துறை சார்ந்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (செவ்வாய்க்கிழமை) பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுப்பணித்துறை குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு,
- பாரம்பரிய கட்டடங்களை புனரமைக்கும் பணிகளை செம்மைப்படுத்தும் வகையில், சென்னையில் மரபு கட்டடங்கள் வட்ட அலுவலகம் ஏற்படுத்தப்படும். ஆறு பாரம்பரிய கட்டடங்கள் ரூ.43.34 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும்.
- சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
- சென்னை பூந்தமல்லியில் உள்ள விக்டரி நினைவு பார்வையற்றோர் பள்ளிக் கட்டடம் ரூ.24.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
- சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உள்ள மெட்ராஸ் இலக்கியச் சங்க கட்டடம் ரூ.6.19 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
- திருச்சி டவுன்ஹாலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் ரூ. 4.85 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
- கன்னியாகுமரி மாவட்டம், இடலாக்குடியில் அமைந்துள்ள சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
- ராணிப்பேட்டை மாவட்டம், பாலாறு நதிக்கரையிலுள்ள தேசிங்கு ராஜா மற்றும் ராணிபாய் நினைவுச் சின்னங்கள் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டிலும், மறுசீரமைத்து புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- தரக் கட்டப்பாட்டு உப கோட்டங்களுக்கு ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.நான்கு தரக்கட்டுப்பாட்டு உபகோட்ட அலுவலகங்களுக்கு ஆய்வகங்கள், ஆய்வக உபகரணங்களுடன் ரூ.6 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஒரு ஆய்வு மாளிகை கட்டப்படும்.