திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி மூலம் 'பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் திமுகவின் மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் திருவள்ளூரில் நேற்று (பிப்.18) நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர்களும், எம்எல்ஏக்களுமான ஆவடி சா.மு.நாசர், மாதவரம் எஸ்.சுதர்சனம், திருத்தணி எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராஜன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரப்போகிறது. இதனால், இவ்வளவு சீக்கிரம் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. தமிழக ஆளுநர் உரைக்கு பதில் அளிக்கும் போது, 2 தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். பாசிசத்தை உள்ளடக்கியது என்பதால் அதை எதிர்ப்பதாகும். மற்றொன்று நம்முடைய உரிமையை விட்டுக் கொடுக்காமல், உரிமையைப் பெற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டும் தீர்மானமாகும்.
தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முரட்டுத்தனமான அரசியலாகும். இந்தியா என்பது பல்வேறு மொழிகள், பழக்கவழக்கம் கொண்ட நாடாகும். கடந்த 2,500 ஆண்டுகளுக்கு முன்பே குடவோலை முறையை கண்டுபிடித்தவன், 'தமிழன்'. அதனால், இதனை ஏற்க முடியாது. இரண்டாவது மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதியை கூட்டுவது, குறைப்பதையும் ஏற்க முடியாது என முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்.