தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டங்ஸ்டன் சுரங்க ஏலம்; "தமிழக அரசுக்கு எதிராக சிலர் வதந்தி பரப்புகின்றனர்" - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்! - MINISTER DURAIMURUGAN

மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு அரசு தனது ஒப்புதலை தெரிவித்ததாக சிலர் பொய்ச்செய்திகளை பரப்பி வருகின்றனர் எனவும், இவை எதையும் மக்கள் நம்ப தயாராக இல்லை என அமைச்சர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் துரைமுருகன் மற்றும் அறிக்கை
அமைச்சர் துரைமுருகன் மற்றும் அறிக்கை (Credits - ETV Bharat Tamil Nadu and TN DIPR X Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2024, 7:40 PM IST

சென்னை :மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய சுரங்கத் துறை அமைச்சருக்கு கடந்த 2023ம் ஆண்டு அக் 3ம் தேதி கடிதம் ஒன்றை எழுதினார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள கிராமங்களில், டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு உரிமம் அளித்துள்ளது. இந்த கிராமங்களில் வாழக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த சுரங்கப் பணிகளால் பாதிக்கப்படும் என்பதால், இந்தப் பகுதி மக்கள் இதை எதிர்த்து போராட்டங்களை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மேலூர் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய எந்த சுரங்கப் பணிகளுக்கும் தமிழ்நாடு அரசு எப்போதும் அனுமதி அளிக்காது என்று உறுதியளித்து, இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்கள்.

இதனை ஏற்று, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அப்பகுதி மக்களும் தமது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்த உறுதியான நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை சகிக்க முடியாத சிலர், மத்திய அரசின் இந்த சுரங்க உரிமத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததாக, விசமத்தனமான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

மேலும், இந்த உரிமத்தை வழங்குவதற்கு முன்பாக மாநில அரசின் கருத்துக்களைப் பெற்றதாக மத்திய அரசும் தவறான தகவலை தெரிவித்துள்ளது. இது குறித்த உண்மை நிலையை விளக்கிட விரும்புகின்றேன்.

இதையும் படிங்க :“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது” அமைச்சர் அளித்த உறுதி; கைவிடப்பட்ட மேலூர் போராட்டம்!

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், முக்கிய கனிமவளங்களை ஏலம் விடுவது தொடர்பாக கனிமக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய அரசு தெரிவித்த உடனேயே, கடந்த 2023ம் ஆண்டு அக் 3ம் தேதியன்று மத்திய சுரங்கத் துறை அமைச்சர் அவர்களுக்கு நான் எழுதிய கடிதத்தில், தமிழ்நாடு அரசின் எதிர்ப்பினை தெளிவாக தெரிவித்தேன்.

ஆனால், கடந்த 2023ம் ஆண்டு நவ 2ம் தேதியன்று மத்திய சுரங்கத்துறை அமைச்சர் இதற்கு அளித்த பதிலில், உரிய சட்டத் திருத்தங்களை மேற்கொண்ட பிறகே இந்த ஏலம் விடப்படுவதாகவும், தேசிய அளவிலான தேவைகளை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் இந்த கொள்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு நமது எதிர்ப்புகளை நிராகரித்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மேலூர் பகுதியில் உள்ள நிலங்களைப் பற்றிய விவரங்கள் மத்திய அரசால் கேட்கப்பட்ட போதும், உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள அரிட்டாபட்டி பகுதியானது ஒரு பல்லுயிர் பெருக்க வரலாற்றுத் தலம் என்பதை சுட்டிக்காட்டினோம்.

இவை எவற்றையுமே கருத்தில் கொள்ளாத மத்திய அரசு ஏலம் விட்டு டங்ஸ்டன் உரிமத்தை மேற்கூறிய நிறுவனத்திற்கு அளித்தது. இன்று மக்களுடைய எதிர்ப்பையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டினையும் கண்டு மிரண்டு, மத்திய அரசும், அதனோடு சேர்ந்து இரட்டை வேடம் போடக்கூடிய எதிர்க்கட்சிகளும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த சுரங்க ஏலத்துக்கு தமிழ்நாடு அரசு தனது ஒப்புதலை தெரிவித்ததாக பொய்ச் செய்திகளை பரப்பி வருகின்றன. இவை எதையும் மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதே உண்மை" என அதில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details