வேலூர்:வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.12.94 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மார்ச் 16) திறந்து வைத்தார். பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “மேல்பாடி பகுதியில் தரைப்பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பாக மூன்று கோடி மதிப்பில் கட்டப்பட்டது. வெள்ளத்தின் காரணமாக பாலம் உடைந்து போனது. அதன் பிறகு ரூ.12.94 கோடி மதிப்பீட்டில் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மிகவும் பலம் வாய்ந்தது. இந்த பகுதியில் உள்ள சாலை பணிகள் தேர்தல் முடிந்தவுடன் சரி செய்யப்படும்.
சங்க காலத்தில் அகோரி பிரிவைச் சேர்ந்தவர்களின் தலமை இடமாக மேல்பாடி இருந்துள்ளது. இங்கு சோழர் காலத்து கோயில் மற்றும் மிகப்பெரிய சமாதி உள்ளது. இங்குள்ள சோமநாதீஸ்வரர் கோயில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. விரைவில் மத்திய அரசிடம் அனுமதி பெற்று, மிகப்பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். மேலும், இப்பகுதியில் பக்தர்களின் வசதிக்காக விடுதிகள் கட்டப்பட்டு, மூன்று மாத காலத்திற்குள் இதனை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.