திருநெல்வேலி: நாடு முழுவதும், ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை நாடாளுமன்றத் தேர்தலை 7 கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் தீவிரமாக வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களுக்குத் தொகுதி வாரியாக பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நெல்லை நாடாளுமன்றத் தொகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் நெல்லை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குத் தினமும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதே சமயம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பல்வேறு இடங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுகின்ற நிகழ்வு, அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று (ஏப்.05) நெல்லை மாவட்டம் பரப்பாடியில் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, முன்னாள் திமுக அமைச்சர் ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளார்.