சென்னை:சென்னை எழும்பூரில் இன்று குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைத் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு வாரம்
அப்போது பேசியவர், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலைத் தடுத்தல் குறித்து ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு இருக்கிறோம். குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் நவம்பர் 25 முதல் நவம்பர் 29 வரை அனைத்து வகை பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுக்கும் வகையில் 14417, 1098 ஆகிய எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு சமூக நலத்துறை மூலம் 181 விழிப்புணர்வு எண் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் எதிர்பாராத வகையில் சில சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
18 வயதிற்கு கீழ் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கின்ற பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. பல்வேறு வகையான துன்புறுத்தல்களிலிருந்து அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். இந்திய அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் நிலையில், மாணவர்களின் உரிமையையும், சுதந்திரத்தையும் பாதுகாத்திட வேண்டும். வருங்காலங்களில் நவம்பர் 17 முதல் 22 ஆம் தேதி வரை குழந்தைகளுக்கு எதிரான வன்முறைத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படும்.
ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் சீண்டல்கள்
பள்ளி வளாகத்திற்குள் மாணவ, மாணவியர்களுக்கு கருத்துரையாற்ற வருபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும், எப்படிப்பட்ட கருத்துக்களை வழங்க வேண்டும் என்பது குறித்து விரிவாக முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை வழிப்பாட்டு நேரங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்து மாணவ, மாணவியர்களுக்கு புரியும் வகையில் தெரிவிக்க வேண்டும். பாலியல் சீண்டல்கள் மட்டுமல்ல; குழந்தைகள் எதற்கெல்லாம் பயப்படுகிறார்களோ அதுவும் சீண்டல்கள்தான்.
இதையும் படிங்க:மாணவிகளிடம் ஒழுக்கக் கேடாக நடக்கும் ஆசிரியர் சான்றிதழ்கள் ரத்து! பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு..!