தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் மைக் பிடித்து பேச்சு" - அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கு! - ANBIL MAHESH POYYAMOZHI

சமூக நீதியின் மூலமாகத் தான் கல்வி, வேலை, நீதி மற்றும் மரியாதை கிடைத்துள்ளது எனவும், இன்றைக்கு எதுவும் தெரியாமல் சிலர் மைக் பிடித்து மேடையில் பேசுவதாகவும் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 7:35 AM IST

தஞ்சாவூர்:சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிரிவினைவாதத்தை உருவாக்கி வேடிக்கை பார்க்கும் ஊழல்வாதிகளை ஒழித்துக் கட்ட சமூக நீதி மாநாடு தேவைப்படுகிறது எனவும், இன்றைக்கு சிலர் குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் மேடையில் மைக்கைப் பிடித்து உளறுகிறார்கள் எனவும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தஞ்சை மண்டல திமுக மருத்துவ அணி சார்பில், தஞ்சாவூரில் சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் நேற்று (டிச.8) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

அப்போது மேசையில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இன்றைக்கு மேடை போடுகிறார்கள், திரைப்படத்தில் நடிக்கிறார்கள், நடித்து முடித்த பிறகு மேடை மீது திரைப்படத்தில் நடிப்பது போன்ற சூழல் நிகழ்வு நடைபெறுகிறது. வடநாட்டில் உள்ள சிறியவர்களை அழைத்து ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் என்று கூறும் கூட்டம் இங்கு நடைபெறுகிறது. இதையெல்லாம் தாண்டி பகுத்தறிவும், சமூக நீதியும் மக்களுக்கு விழிப்புணர்வாக வர வேண்டும் என்று கூட்டத்தை நடத்துகின்ற ஒரே இயக்கம் திமுக தான்.

அமைச்சர் அன்பில் மகேஸ் மேடை பேச்சு (ETV Bharat Tamil Nadu)

சமுதாயத்தில் இருக்கிற மிகப்பெரிய ஊழல், சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிரிவினைவாதத்தை உருவாக்கி, அதை வேடிக்கை பார்க்கும் கூட்டம், அந்த கூட்டத்தை சார்ந்த ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்தின் ஊழல்வாதி தான், அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சொன்னால் இது போன்ற மாநாடுகள் நமக்குத் தேவைப்படுகிறது. ஆயிரம் வருடங்கள் படிக்காமல் இருந்தவர்களை படிக்க வைத்தது தான் சமூக நீதி.

சமூக நீதியின் மூலமாக கல்வி, வேலை, நீதி மற்றும் மரியாதை கிடைத்தது. அந்த சமூக நீதியைப் பெற்று தந்தது பெரியார், அண்ணா, கலைஞர். அந்த வழியில் தமிழக முதலமைச்சர். இதெல்லாம் தெரியாமல் சிலர் நம்மை எதிர்க்க வேண்டும் என்று சாம்பார், வடை, பாயாசம் எனப் பேசுகின்றனர். சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று சொன்னதே நாம் தான், படையைத் திரட்டிக் கொள்கையை நோக்கி நாம் செல்வோம் என்று கூறினால், நமக்கு பின்னால் அமர்ந்து நம் மேல் அம்பை விடுகிறார்கள். குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் மேடையில் மைக்கைப் பிடித்து உளறுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.

திமுக சமூக நீதி மற்றும் பகுத்தறிவு பாசறை கூட்டம் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க:மேடை ஏறினால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? - விஜயை மறைமுகமாக சாடிய கனிமொழி எம்.பி.!

அதனைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, "சாதியால் பிரிந்து கிடக்கிறோம். இப்போது எல்லோர் வீட்டிலும் சாப்பிடுகிறோம், பெண் கொடுப்பதில் மட்டும் தான் மனசு வரவில்லை, ஆனால், எல்லோரும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா? சொல்லிவிட்டுச் செய்தால் அது வாக்கு வங்கி அரசியல், ஆனால் சொல்லாமல் சமத்துவத்தை கொண்டு வந்து எல்லா சாதிக்காரர்களையும் கொண்டு வந்து வைத்தவர் கலைஞர். வாக்கு வங்கி அரசியலில் சித்தாந்தத்தை, கொள்கையை, தான் ஏற்றுக் கொண்ட தத்துவத்தை நிறைவேற்றிக் காட்டுகின்ற ஆற்றல் இந்தியாவில் இருக்கிறது என்றால் அங்கேதான் திமுக தனித்து நிற்கிறது" என்றார்.

மேலும், இந்த கூட்டத்தில் எம்பி முரசொலி, திமுக மருத்துவர் அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு, மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், துணைச் செயலாளர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details