சென்னை:கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கில் கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருந்தது. அதில், 'கனிமவளம் கொண்ட நிலங்களும், அரசியல் சாசனத்தின் 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள் என்ற பிரிவின்கீழ் வருகின்றன. எனவே சுரங்கங்கள், கற்சுரங்கங்கள் ஆகியவற்றை கொண்டுள்ள நிலங்களின் மீது வரி வசூலிப்பதற்காக சட்ட இயற்றுவதற்கு மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மாநிலத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக, கனிம வளம் கொண்ட நிலங்கள் மீது வரி விதிப்பதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ற வகையில் இந்த சட்ட மசோதாவை அரசு அறிமுகம் செய்கிறது. இந்த சட்டப்படி, பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களும், கரட்டுக்கல், சரளை மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கல், மணல், படிகக் கல், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 வகை கனிமங்களை சிறிய வகை கனிமங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
பெரிய கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. சிறு கனிமங்களுக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரை வரி நிர்ணயிக்கப்படுகிறது. நிலத்தில் உள்ள கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு முறையே ஒரு டன்னுக்கு ரூ.8,500 மற்றும் ஒரு கன மீட்டருக்கு ரூ.3.50 என வரி நிர்ணயம் செய்யப்படுகிறது.