சென்னை:அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பணியிடங்களில் பாலியல் தொந்தரவிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் மத்திய அரசால் 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், பஞ்சாலை, நூற்பாலை, ஆடை உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகி வருவதால், அனைத்து மாவட்டங்களிலும் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடக் கோரி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கருப்பசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத் தரப்பில், பணியிடங்களில் பாலியல் தொந்தரவிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டப்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளூர் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அதிகாரி கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த குழுக்கள், புகார்களைப் பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.
மேலும், 10 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்களில் உள் விசாரணைக்குழு எனப்படும் விசாகா குழு அமைக்கவும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 22ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:இளம் வயதிலேயே தங்கல் பட நடிகை மரணம்.. பிரபலங்கள் இரங்கல்..!