சென்னை:சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த மாணவர் சுந்தர், அக்டோபர் 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், நான்கு நாள்கள் சிகிச்சை பெற்று வந்த மாணவன், அக்டோபர் 9ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்த மாணவனின் தந்தை ஆனந்தன் அளித்த புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்த பெரியமேடு காவல்துறை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேரைக் கைதுசெய்து, அவர்களுக்கு எதிராக பிரிவு 103-இன் கீழ் கொலை வழக்கு பதிவுசெய்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 மாணவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவானது, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று (நவம்பர் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றச்செயலில் ஈடுபட்டு கைதாகும் கல்லூரி மாணவர்களுக்கு, மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கும் நிலையில், அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
மேலும், குறுகிய காலத்திற்கு மருத்துவமனையில் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் எப்படியாவது நீதிமன்றம் ஜாமீன் வழங்கிவிடும் என்ற தவறான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் நீதிமன்றம் உருவாக்கக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ள மாணவர்களின் பெற்றோரிடம் நேரில் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் சில மாணவர்களும் ஜாமீன் கூறி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து ஜாமீன் மனுக்களையும் நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் மாணவர்களின் பெற்றோரை நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிறைகளில் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம்; ஆய்வு செய்ய உள்துறைக்கு உத்தரவு!